இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை – ஜே.வி.பி. கேள்வி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_431.html
பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக இதுவரையில் ஒருவார்த்தை கூட தெரிவிக்காதிருப்பது ஏன் ? என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் இன்று கேள்வி எழுப்பினார்.
காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் மக்கள் விடுதலை முன்னணி இன்று ஆர்பாட்டமொன்றை நடாத்தியது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
காஸா மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலுக்கு அமெரிக்காவே இஸ்ரேலின் பின்னால் இருந்து உதவி வருகின்றது. இதனாலேயே அமெரிக்காவுக்கு நாம் அழுத்தத்தைக் கொடுக்க விரும்புகின்றோம். ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட வேண்டும் என நாம் கூறிக்கொண்டிருப்பதனால் அந்த அப்பாவி மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. அதில் பிரதான பங்குதாரராகிய அமெரிக்காவுக்கும் அழுத்தம் வழங்கப்படவேண்டும் எனவும் ஜே.வி.பி. ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.