மஹேல வெற்றியுடன் ஓய்வு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_508.html
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 ரீதியில் வெற்றி பெற்று தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.
கடந்த 14ம் திகதி கொழும்பில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதற்கமைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்கவின் 92 ஓட்டங்கலுடன் 320 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி. இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சர்பிராஸ் அஹமட் இன் கன்னி சதத்துடன் 332 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுக்களை பெற்றுகொண்டார்.12 ஓட்டங்கள் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்க இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. போட்டியின் நான்காம் நாளான நேற்று 282 ஓட்டங்களை எடுத்த நிலையில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
271 என்ற வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நேற்றைய நான்காம் நாள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை எடுத்திருந்தது.
மூன்று விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 144 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான், 165 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 09 விக்கெட்டுக்களை இழந்தது. பாகிஸ்தானின் இறுதி துடுப்பாட்ட வீரர் யுனைட் கான் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வரவில்லை. எனவே, இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் சிறப்பான பந்து வீசிய ரங்கன ஹேரத் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு இந்தப் போட்டியில் மொத்தமாக 14 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
தனது இறுதி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மஹேல ஜெயவர்தன முதல் இன்னிங்சில் 4 ஒட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 54 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார்.
இதன்படி தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மஹேல ஜெயவர்தனவின் ஓய்வை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது இலங்கை அணி