எந்த புத்தர்? யாருடைய பெளத்தம்?

துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான். “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.
சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர்.

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை.

மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

இந்தக் கருத்தானது வெளிக்கொணரும்போது, மகாநாம தேரர் நிச்சயம் சந்தோசித்திருப்பார். அவர் புத்தரின் போதனைகைளை முற்றுமுழுதாக தலை கீழாக மாற்றி, முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான புத்த சமயத்தை நிர்மாணித்ததோடு, அது 15 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் வழிநடாத்துவதற்கும் காலாக அமைந்துள்ளது.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்த்து…!”

யாழ்ப்பாண நூலகம் தீப்பற்ற வைக்கப்பட்டது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய சிறந்த கவிதை அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. புத்தரை அவ்வாறு ஏன் கொன்றனர்? என அமைச்சர்கள் கேட்கும்போது பொலிஸார்,

“இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுட முடியாது போயிற்று” என்கின்றனர்.

உண்மைதான். ஆயினும் உண்மையில் 6 ஆம் நூற்றாண்டில்தான் புத்தர் கொலை செய்யப்பட்டார். மகாநாம தேரர் புத்த சமயத்தை புதிதாக எழுதியது மட்டுமன்றி, அது யுத்தம் சார்ந்த புத்த சமயத்திற்கு பொருந்தக்கூடிய புதிய யுத்தம்சார் புத்தனையும் உருவாக்கியது. மகாவம்ச புத்தர் கௌதம (சித்தார்த்த) புத்தரில் முற்றிலும் மாறுபட்டவர்.

திரிபிடகத்தில் வருகின்ற புத்தர் போலன்றி, மகாவம்சத்து புத்தர் தந்திரத்துடனும், பெரும் மனித பலத்துடனும் எதிரிகளை சுற்றிவளைப்பவராக இருக்கின்றார். அவர் புத்த பெருமானைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் அன்பும் கருணையும் காட்டுபவரல்லர். மகாவம்ச புத்தர் பிணைப்புக்களுடையவர். அவருக்குத் தேவையாக இருந்தது என்னவெனில், தனது சமயம் பாதுகாக்கப்படுகின்ற இலங்கையைக் கட்டிக் காப்பதாகும். இவ் அரசியல் திட்டத்தில் கடவுளர்கள் அவரது நண்பர்களாவர். அக்கிரமக்காரனான விஜயன் அவருக்கு அடிமைப்பட்டவர். இலங்கையின் ஆரம்பகால அரக்கர்கள் அவரது எதிரிகளாவர். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் உண்மையான புத்தர் ஒருபோதும் செய்யாதவற்றைச் செய்பவர். இலங்கைக்கு வந்து இயக்கர்களுக்கு தர்மோபதேசம் செய்வது ஒருபுறமிருக்க அவர்களை விரட்டியடித்தவர். திரிபிடகத்திலுள்ள புத்தர் அரக்கர்களை - இயக்கர்களை விரட்டியடிக்கவில்லை, அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. “யக்ஷ சங்யுக்த”வில் புத்தர் ஆலவக எனும் அரக்கனை (பிசாசு) தன் பொறுமையினாலும், நீதியினாலும், நற்போதனைகளினாலுமே தன்வயப்படுத்துகின்றார்.

மற்றொரு அரக்கனான சீவக(ன்), அனாத்தபிண்டிக்க எனும் பிரபுவிடம் சென்று புத்தரைச் சந்திக்குமாறு மும்முறை வேண்டியிருக்கின்றான். இதுஇவ்வாறிருக்க, மகாவம்சத்தின்படி தமிழர்கள் பிற்காலத்தில் வர்ணிக்கப்பட்டது போன்று அரக்கர்களும் பிறப்பிலேயே கெட்டவர்கள். மகாவம்சத்தில் வருகின்ற புத்தர் மழை, புயல், இருள் என்பவற்றைத் தோற்றுவித்து அவர்களைப் பயமுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்து அவர்களை புனிதி பூமியினின்று விரட்டியடித்துள்ளார்.

தற்கால இலங்கையில் சிவில் சமூகத்தினரிடையே சமாதானத்தை உருவாக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் உரிமையாளர்கள் - வெளியார் என்ற எண்ணக்கருவேயாகும். பௌத்தர்கள் இலங்கை தீவின் தனியுரித்துடையவர்கள் எனவும், மற்றோர் வெளிநாடுகளிலிருந்து) இலங்கைக்கு வந்தவர்கள் எனவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டினுள் எவ்வித அதிகாரமுமில்லை.. உரிமையுமில்லை. இந்த கருத்துக்கூட மகாவம்ச பொய்யினால் வடிவமைக்கப்பட்டதாகும். மகாவம்சத்திற்கேற்ப, புத்தபெருமான் தனது மரணப்படுக்கையில் தனது மார்க்கமானது அழிவுறாமல் இருப்பது இலங்கையிலேயே என்பதால் அதனை மிகவும் கவனத்துடன் பாதுகாக்குமாறு கடவுளர்களிடம் வேண்டியுள்ளார். புத்தரின் இறுதிக் காலகட்டத்தில் சில நாட்கள் பற்றி “மகாபரினிப்பான சூத்திர”த்தில் தெளிவாக்க் கூறப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்பதைக் காணலாம்.
தனது சமயம் பரிசுத்தமாக பாதுகாக்கப்படுவது இலங்கை எனும் இந்த சிறிய தீவில்தான் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை. அதனைப் பாதுகாக்குமாறு ஒருபோதும் எந்தவொரு கடவுளையும் வேண்டவுமில்லை. கடவுளர்களிடம் பொறுப்பேற்குமாறு கூறியது மகாவம்சம் இட்டுக் கட்டிய மற்றொரு பொய்யாகும்.

யோதஜீவ சூத்திரத்தில் புத்தரின் பதிலைக் கேட்டு யோதஜீவ அழத் தொடங்கினார். அவர் பொய்யாகத்தான் அழுகிறார். அதற்குக் காரணம், பொய்யான வழிகாட்டல்கள் மூலம் யுத்தத்தில் இறப்பவர்கள் சுவனம் செல்வர் என்ற தவறான வழிகாட்டலில் அவரும் நீண்டகாலமாக வழிகாட்டப்பட்டதை நினைத்தே அவர் அழுகிறார் என புத்தர் சொன்னார்.

மகாநாம எனும் அரசியல் தேரர் மகாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டு உருண்டோடிய போதும், மஹானாம எனும் தேரர் மஹாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டுகள் கழிந்துள்ள போதிலும் அவரது இல்லற துறவற சீடர்களால் நாங்கள் இன்று ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உள்ளோம்.

மகாவம்ச புத்த சமயம், இலங்கை பௌத்தர்களின் புனித பூமி எனவும், பௌத்தரல்லாத ஏனையோ யுத்தம் செய்து கொன்றொழிப்பதில் குற்றமில்லை எனவும் குறிப்பிடுகின்றது. இந்தப் பொய்யினால் இங்கு பெரும்பான்மை, சிறபான்மை ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளனர். எங்களது வரலாறு, அரசியல், புத்த சமய மகாநாம தேரர் மற்றும் அவரது சீடர்கள் சோடித்த இந்தப் பொய்யினால் மீட்டெடுக்கும் வரை இலங்கையில் சமாதானத்தை மலரச் செய்யவே முடியாது.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

Related

Articles 1777012402443099000

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item