சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_86.html
கைதான மாணவன் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில் உயர்தர கல்வியைக் கற்று இந்த மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்திற்குள் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் இந்த மாணவன் தொடர்புட்டுள்ளமை குறித்து, அவரது கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன்மூலம் அனுப்பியுள்ள குறுந்தகவல்களை ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இன ரீதியாக அமைதியின்மையைத் தோற்றுவிப்பதற்கு கைது செய்யப்பட்டுள்ள மாணவனின் செயற்பாடுகள் காரணமாக அமைந்துள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அந்த மாணவரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்து, வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் ஓரிரு தினங்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண மேலும் சுட்டிக்காட்டினார்.