ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றி! ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_56.html
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று ரீதியான வெற்றியை பெறமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு ஹைட்பாக் கோனரில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
தமது கட்சி மலையுச்சிக்கு செல்வதற்கு இன்னும் சில தூரமே உள்ளதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.
தாம் லண்டன் சென்றிருந்த போது விடுதலைப்புலிகள் தரப்பினர் எவரையும் சந்திக்கவில்லை என்றும் ரணில் கூறினார்.
இதன்போது கருத்துரைத்த கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் அமைப்பாளர்கள் உதவியின்றி கட்சியினால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று வெற்றியை பெறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
யார் துரோகி யார் வீரன் என்ற உண்மை வெளிச்சமாகியுள்ளது- ரணில்
யார் துரோகி யார் வீரன் என்ற உண்மை வெளிச்சமாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சேவையாற்றவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றியீட்டும் நோக்கில் துரோகி, வீரன் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
போரை வென்றெடுக்க கடுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சரத் பொன்சேகாவின் வாக்குரிமை முடக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, பௌத்த பிக்குகளை படுகொலை செய்த நபர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் துரோகி யார், வீரன் யார் என்பது வெளிச்சமாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே துரோகம் இழைத்துள்ளார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தில் 12000 கீழ் மட்ட கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.