சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு மைத்திரியிற்கு கையளிக்கப்பட்டது
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_58.html
President Maithripala Sirisena appointed SLFP Chairman
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) விடுத்துள்ள விசேட அறிக்கையில்,
´நமது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை பதவியை இன்றிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கிறேன். நான் இந்த தீர்மானத்தை எடுப்பது ஐம்பது வருடகாலமாக உறுப்பினராக, தலைவராக மேலும் பல பதவிகளை வகித்து அர்ப்பணிப்புடன் பாதுகாத்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாகப் பிரிவதை பொறுத்துக் கொள்ள முடியாத விருப்பமின்மையால் ஆகும். தாய்நாட்டை போன்று இதனையும் பாதுகாக்கவும் முன்னேற்றவும் அர்ப்பணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒற்றுமையாக வைத்துக் கொள்வது அதன்மீது அன்பு செலுத்தும் அனைவரினதும் பொறுப்பாகும். அதனால் புதிய தலைமை, நிறைவேற்று சபை உள்ளிட்ட அனைத்து அதிகார பிரிவும் தேசத்தின் முழு எதிர்பார்ப்புக்காக வேண்டி கட்சியை வழிநடத்த வேண்டும்.
கட்சிக்காரர்களின் பாதுகாப்பு, கட்சிக்குள் ஜனநாயகம் போன்றவை குறித்து உங்கள் அனைவரினதும் கவனம் திரும்பும் என்பது எனது நம்பிக்கை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த சுமார் 50 லட்சம் மக்களின் பிரார்த்தனை மற்றும் அபிலாஷைகளுக்காக எதிர்காலத்திலும் நான் முன்நிற்பேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
கடந்த காலங்களில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கவும் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.´
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். - Ada Derana